Logo

articles archives

previous

next

tamil articles   

   

இப்படியும் ஒரு பிஷப்
உயர் மறைதிரு.டாக்டர்.ஜூபிலி ஞானாபரணம் ஜான்சன்
லூத்தரன் சபையின் ஒன்பதாம் தரங்கை தமிழ் பேராயர்
தோற்றம் 3.8.1933 – மறைவு 10.8.2008

 

1. எளிய பயணி: ரயிலில் முதல்வகுப்பு A/C அல்லது விமான பயணம் செய்தறியாதவர். எங்கு செல்வதானாலும் இரண்டாம்வகுப்பு ரயில் பயணம் அல்லது பேருந்து பயணம்தான்.

2. கார் உபயோகிக்காத பிஷப். தனக்கு கொடுக்கப்பட்ட அம்பாசிடர் காரைவிற்று லூத்தரன் திருமண்டல Treasury-ல் பணத்தை சேர்த்துவிட்டார். அவரது துணைவியார் மறைதிரு.சீபர்ட் ஜான்சனுக்கு சுவிசேஷ பணிக்காக கொடுக்கப்பட்ட Trecker வண்டியைதான் பிஷப் அவர்களும் உபயோகித்தார். காரணம் அதில் பலபேர் பயணம் செய்யலாம் என்பதே.    இது ஏழை,    எளியவர் அனைவருக்கும் பொதுவாகனமாக உபயோகப்படுத்தப்பட்டது.    இந்த வேன் வியாதிப்பட்ட ஏழை எளியவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல பெரும்பாலும் உபயோகிக்கப்பட்டதால் இதை Ambulence    என்றே அனைவரும் அழைத்தனர். பிஷப்பை பொறுத்தவரை மற்ற எளியவர்களைப்போல டவுன்பஸ் பயணம்தான். பிஷப் அவர்கள் எங்காவது செல்லும்போது பார்ப்பவர்கள் யாராவது தமது காரில் கொண்டுபோய் விடுவதாக சொன்னால் ஏற்பார்,    ஆனால் அந்த பயணத்துக்காக அவர்கள் செலவுசெய்ய அனுமதிக்கமாட்டார். சைக்கிளில் அமர்ந்து இரு சக்கரவாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்து செல்லும் எளியவர். அலுவலகப் பணியாக வந்தாலும், ரயில் நிலையத்துக்கு செல்ல காருக்காக செலவு செய்யாமல் கோயில்பிள்ளையின் சைக்கிளின்பின்னால் அமர்ந்துசெல்வதே வழக்கம்.      டாக்டர்.ஜோசப் கண் மருத்துவமனைக்கு அழைக்கப்பட்டிருந்தார். வழக்கம்போல ரயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்து கோவை ரயில் நிலையத்தில் மற்ற சாமான்யர்களோடு இறங்கி ஜோசப் கண் மருத்துவமனைக்கு அமைதியாக சென்று ஒருபுறம் இருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தார். இவரை வரவேற்க ரயில் நிலையம் சென்றிருந்த கண் மருத்துவமனை இயக்குனர் மற்றும் அதிகாரிகள் இவரைத் தேடி அலுத்துப்போய் திரும்பி வந்தபோது இவர் பெஞ்சில் அமர்ந்திருப்பதைக்கண்டு அதிர்ந்து போனார்கள். பிஷப் அவர்களை அடையாளம் தெரியாத வாயில் காப்போன் பிஷப் உட்காருவதை தடுத்திருக்கிறான். விவரம் அறிந்தபின் வாட்ச்மென் பிஷப்பிடம் மன்னிப்புக்கேட்க வாயில்காப்போன் முதுகில் தட்டிக்கொடுத்து சமாதானப்படுத்தினார்.

3. நட்சத்திர ஹோட்டல்களில் ஏன்! எந்த ஹோட்டலிலும் தங்கமாட்டார். ஆலய முகப்பிலோ, பள்ளியிலோ அல்லது ஆயர் மற்றும் கோயில்பிள்ளையின் வீட்டு வராந்தாவிலோ படுத்து உறங்க தயங்காதவர். ஒருமுறை யூனியன் கிறிஸ்டியன் மேல்நிலைப்பள்ளி மதுரைக்கு ஒருவிஷயமாக வந்தவர் இரவு நேரமாகி விட்டபடியால் காவலனிடம் தான் யார் என்பதைத் தெரிவித்து அதிகாரிகள் யாவரையும் அந்த நேரத்திலே தொந்தரவு செய்யவேண்டாம் என்று சொல்லி ஒருபெஞ்சிலே படுத்து இரவைக்கழித்தவர் இந்த பிஷப்.

4. பண விஷயத்தில் மிகவும் கராரானவர். ஒருமுறை மூத்த ஆயர் மற்றும் குருகுல இயக்குனரது மகன் திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். அழைத்த ஆயர் முதல் வகுப்பு ரயில்கட்டணம் மற்றும் இதர செலவுகளுக்காக தாராளமான காசோலை பிஷப்பிற்கு அனுப்பி இருந்தார். திருமணத்துக்கு வந்த பிஷப் அழைத்த ஆயாரை சந்தித்து ஏன் இத்தனை அதிகப்படியான பணம் அனுப்பினீர்கள் என்று அன்பாகக் கடிந்துக்கொண்டு இரண்டாம் வகுப்பு பயணச்சீட்டுக்கான பணத்தைமட்டும் எடுத்துக் கொண்டு மீதிப்பணத்தை வற்புறுத்தி திருப்பித்தந்தவர் இவர். CMC வேலூரில் பேச அழைக்கப்பட்ட போது அவர்கள் இவருக்கு என்று தந்த கணிசமான தொகையில் இரண்டாம்வகுப்பு பயண கட்டணம் மற்றும் உணவுக்கான செலவுகள் போக மீதித்தொகையை டையோசிஸ்ஸின் மத்திய கருவூலத்தில் செலுத்தி ஒரு முன்மாதிரியான வாழ்வு வாழ்ந்தவர் இவர்.

5. கடிதம் எழுத பணம் செலவழிக்கமாட்டார். உயர்ரக பேப்பர், கவர்கள் போன்றவை இவர் உபபோகித்ததில்லை. தமக்கு கடிதம் எழுதுபவர்கள் தபால்கார்டில்தான் (அன்று 15 பைசா இன்று 25பைசா) எழுதவேண்டும் என்று கூறுவார். தாமும் தபால் கார்டில்தான் பதில் எழுதுவார். மனிதருக்கு மனிதர் என்ற முறையில்தான் கடிதம் இருக்கும். எவ்விடத்திலும் பிஷப் என்று வார்த்தை இராது. கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு நற்செய்திப் பணியாளராக மாறிய மீனவர் பொன்னம்பலத்துக்கு கடிதம் எழுதினால் "பொன்னம்பலத்திற்கு ஜான்சன் எழுதுவது" என்றுதான் இருக்கும்.

6. காட்சிக்கு எளியவர்: பிஷப் பதவி ஏற்றதும் இதற்குமுன் இருந்த பிஷப்மார் எழுதி வைத்திருந்த "பார்வையாளர் நேரம்" என்ற பலகையை தன் அலுவலகத்திலிருந்தும், வீட்டுவாயிலிருந்தும் எடுத்து எறிந்துவிட்டார். யார் வேண்டுமானாலும் எந்த நேரத்திலும், இரவு 11:30 ஆனாலும் இவர் உணவு அருந்திக்கொண்டிருந்தாலும் இவரை பார்க்கலாம். பார்வையாளர்களை காத்திருக்க வைக்கமாட்டார். பார்க்கவருபவர்கள் எந்த கஷ்டமும் படக்கூடாது என்பது இவரது குறிக்கோள். எல்லாருக்கும் சமமான மரியாதை. இவரது கார் ஓட்டுனர் இவரோடு மேஜையில் அமர்ந்து உணவு உண்ணவேண்டும். கடைநிலை ஊழியர்களையும் மரியாதையாக அவர், இவர் என்று அழைக்கும் பண்பாளர்.

7. இவர் சிறந்த படிப்பாளி பல நுல்கள் எழுதியுள்ளார். தமக்குவரும் Royalty பணம் மற்றும் தமது சொந்த வருமானம், எளிய வாழ்வு வாழ்ந்து சேமித்தது ஆகிய எல்லா பணமும் ஆலயங்கள் கட்டுவதற்கு எளியவரை பேணுவதற்கு, பலரும் படிக்க உதவுவதற்கு என தாராளமாக செலவுசெய்வார். தமக்கு மாலை மரியாதை, சால்வை போர்த்துதல் ஆகியவற்றை தவிர்த்து அந்தப் பணத்தில் ஏழை எளியவர்களுக்கு உதவ வேட்டி, சட்டை, புடவை ஆகியவற்றை வாங்கித் தருமாறு வற்புறுத்துவார். இவரது உதவியால் பயனடைந்த வயது முதிர்ந்தோர் உடல் ஊனமுற்றோர் மாணவர்கள் மிகப்பலர்.

8. தனது பணத்தால் மட்டுமல்ல உடல் உழைப்பாலும் உதவுவது இவரது தனி சிறப்பு. ஆலய கட்டிட வேலை நடக்கும் இடங்களில் இவராக சென்று கல் எடுத்துக்கொடுத்தல் போன்ற பணிகளும் செய்து உதவுவார்.

9. யார் மீதும் அதிகாரம் ஆதிக்கம் செலுத்தியதில்லை. அன்பான வார்த்தைகளாலேயே தவறு செய்பவர்களை திருத்த முயல்வார்.

10. எளிய வாழ்வு வாழ்ந்தது தற்பெருமைக்காக அல்ல. பவுல் அடியாரைப்போல் "நற்செய்தியை பிரசங்கிக்கும்போது எனக்கு உண்டாயிருக்கிற அதிகாரத்தை முற்றிலும் செலுத்தாமல் கிறிஸ்துவின் நற்செய்தியை இலவசமாகக் கூறுவதே எனக்கு பயனாகும்". (1கொரிந்தியர் 9:18) என ஆணித்தரமாக நம்பி வாழ்ந்தவர்.

11. பிஷப் பதவிக்கான முத்திரை மோதிரம் இவர் அணிந்ததே இல்லை. ஏழை, எளியவரிடம் பேசும்போது முத்திரை மோதிரம் அணிந்திருந்தால் அவர்களை தன்னைவிட்டு அன்னியப்படுத்தும் என்பதே அதற்கு காரணம் என்பார்.      தான் இறந்தவுடன் பிஷப் பணியிலிருந்து ஓய்வுபெற்றபோது வெகுமதியாக அளிக்கபட்ட தங்கசிலுவையை திருச்சபைக்குத் திருப்பித்தர தனது மனைவி மறைதிரு.சீபர்ட் ஜான்சனிடம் பணித்தவர் இவர்.

இப்படியும் ஒரு பிஷப்!

கிறிஸ்தவர் மறுமலர்ச்சி

தொகுத்தளித்தவர்:ப.வாட்சன்